முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இளைஞர் சங்க இயக்கத்திற்குள் தற்போது நிலவும் சர்ச்சைகள் குறித்து கவலை தெரிவித்துள்ளார், நீண்டகால அமைதியின்மை அதன் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
கலை, பொழுதுபோக்கு மற்றும் ஏனைய துறைகளில் கிராமப்புற இளைஞர்களுக்கான திறன்கள் மற்றும் வாய்ப்புகளை வளர்ப்பதற்காக கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களுக்கு முன்பு தான் இந்தத் திட்டத்தைத் தொடங்கியதை நினைவு கூர்ந்த விக்கிரமசிங்க, தற்போது நாட்டின் முன்னணி இளைஞர் அமைப்பாக இது வளர்ந்துள்ளதாகவும்,அதன் பல உறுப்பினர்கள் இப்போது அரசியல் மற்றும் வணிகத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார்.
அமைப்பின் சட்டவாக்கத்தில் முன்மொழியப்பட்ட சமீபத்திய திருத்தங்கள் நாடு தழுவிய போராட்டங்களைத் தூண்டியதாகவும், சிலர் இந்த மாற்றங்கள் இயக்கத்தை அரசியல்மயமாக்குவதை நோக்கமாகக் கொண்டவை என்றும் குற்றம் சாட்டியதாகவும் அவர் குறிப்பிட்டார். “இது தொடர்ந்தால், இளைஞர் சங்க இயக்கம் மோசமடையும்” என்றும் அவர் எச்சரித்தார்.
தற்போதைய தலைமையும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முன்னாள் உறுப்பினர்களும் கலந்துரையாடி ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும் என்றும், இந்த இயக்கத்தை ஒருபோதும் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக்கூடாது என்றும் விக்கிரமசிங்க வலியுறுத்தினார். சர்ச்சையைத் தீர்க்கத் தவறினால், அரசியல் கட்சிகள் தலையிடுவதற்கான கதவைத் திறக்கக்கூடும் என்றும், இயக்கத்தின் இருப்பை அச்சுறுத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.