ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் இலங்கை மற்றும் இந்தியா இடையே ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இரு நாடுகளின் கிரிக்கெட் சபைகளுக்கிடையே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக நியூஸ்வயர் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த இந்திய அணியின் பங்களாதேஷ் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டதாலும், ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடர் ஒத்திவைக்கப்பட்டதாலும், இரு நாடுகளுக்கும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரை நடாத்துவதற்கு தற்போது சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
இருப்பினும், இந்திய-இலங்கை தொடர் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகல்கள் இல்லாவிட்டாலும், கிரிக்கெட் வட்டார தகவல் மூலங்களை மேற்கோள் காட்டி Newswire இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தியில், இரு நாடுகளின் கிரிக்கெட் சபைகளும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட இருதரப்பு தொடர் ஒன்றை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகின்றன. அதன்படி, இது மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று T20I போட்டிகளைக் கொண்ட சுற்றுப்பயணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச போட்டி அட்டவணைப்படி (FTP) இந்தியா அணி பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் T20I தொடர்களில் திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் அந்நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி நிலை காரணமாக அந்த சுற்றுப்பயணம் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்க அண்மையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்கிடையே, இலங்கை அணி, ஆகஸ்ட் மாத பிற்பகுதியில் ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது, அந்த சுற்றுப்பயணத்தின் முதல் போட்டி ஆகஸ்ட் 29 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது. இதனால், இந்தியாவுடன் தொடரை நடத்துவதற்கு ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் இலங்கைக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
இது இவ்வாறிருக்க, இலங்கை சென்று 3 ஒருநாள் மற்றும் 3 T20I போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்தியா விரும்புவதாக இந்திய ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் இலங்கை கிரிக்கெட் சபையுடன் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு அணிகளும் கடைசியாக இலங்கையில் சந்தித்தது 2024 ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில்; குறித்த தொடர் நடைபெற்றதுடன், இந்திய அணி T20I தொடரை வெற்றிகொள்ள, ஒருநாள் தொடரை இலங்கை அணி வென்றமை குறிப்பிடத்தக்கது.