இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் பெண்கள் 52 சதவீதமாக இருந்தாலும், பெண் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் இலங்கை உலகின் 193 நாடுகளில் 135வது இடத்தில் உள்ளது என உலக பொருளாதார மன்றம் மற்றும் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) ஆகியவை தெரிவித்துள்ளது.
“பாலின பாகுபாடுகளை சீராக்குவது” என்ற தலைப்பிலான நிகழ்வில், இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடு குறித்து பல்வேறு நிபுணர்கள் தங்கள் ஆய்வை முன்வைத்தனர்.
குறித்த நிகழ்வில் இலங்கையில் காணப்படும் பாலின வேறுபாடு மற்றும் பெண்களின் நல்வாழ்வு குறித்த விழிப்புணர்வு தொடர்பில் பேசப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரியாவும் கலந்து கொண்டார், அவர் “ஒவ்வொரு பெண்ணும் பாதுகாப்பாக இருக்கும் வரை எந்தப் பெண்ணும் பாதுகாப்பாக இல்லை என்றே எடுத்து கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார். பெண்களையும் அவர்களின் நல்வாழ்வையும் பாதுகாக்கும் வலுவான சட்டங்களை அமுல்படுத்துவது குறித்தும் பிரதமர் பேசினார்.
அத்துடன் குழந்தை பராமரிப்பு மற்றும் வீட்டு வேலைகள் போன்ற பெண்களின் போதிய ஊதியம் பெறாத வேலைகள், அவர்களின் 20 வயதுகளில் உச்சகட்ட தொழிலாளர் வருமானத்தில் 40 சதவீதத்தை ஈட்டுகின்றன என்றும் UNFPA கூறியுள்ளது.
இலங்கையில் சுமார் 66 சதவீத பெண்கள் இணைய வழி துன்புறுத்தலைப் எதிர்கொள்வதாகவும், இதில் பிளக்மெயில் மற்றும் ஆபாச உள்ளடக்கம் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும், 54 சதவீத பெண்கள் அலுவலகங்களில் நேரடியான பாதிப்பை அடிக்கடி அனுபவிக்கின்றனர் என அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.