ஜிம்பாப்வேக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
இதன் முதலாவது ஒரு நாள் போட்டி ஹராரே நகரில் நேற்று இடம்பெற்றது. நாணய சுழட்சியில் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சை தேர்வு செய்தது செய்த இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 298 ஓட்டங்கள் குவித்தது. பெத்தும் நிசாங்க (76 ஓட்டம்), ஜனித் லியனகே (70 ஓட்டம்). கமிந்து மென்டிஸ் (57ஓட்டம்) என மூவரும் அரைசதம் அடித்தனர்.
அடுத்து களம் இறங்கிய ஜிம்பாப்வே பென் கர்ரன் (70 ஓட்டம்). பொறுப்பு கேப்டன் சீன் வில்லியம்ஸ் (57 ஓட்டம்) மற்றும் சிகந்தர் ராசா ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் இலக்கை நெருங்கியது. கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 10 ஓட்டம் தேவைப்பட்டது. இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷங்க வீசினார்.
அவர் முதல் 3 பந்துகளில் சிகந்தர் ராசா (92 ஓட்டம்), பிராட் இவான்ஸ் (0), ரிச்சர்ட் நரவா(0) ஆகியோரது விக்கெட்டுகளை வரிசையாக கபளீகரம் செய்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். அடுத்த 3 பந்தில் 2 ஓட்டம் மட்டுமே விட்டுக்கொடுத்து வெற்றியை உறுதி செய்தார். ஜிம்பாப்வே 50 ஓவர்களில் 291 ஓட்டங்களை பெற்று 8 விக்கட்டுக்களை இழந்த நிலையில் இலங்கை தனது வெற்றியை உறுதி செய்தது.