இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சீனப் பயணத்தின் போது இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொவிட் தொற்றுநோய் காரணமாக நிறுத்தப்பட்ட இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி விமான சேவை அடுத்த மாத தொடக்கத்தில் இருந்து மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள சீனா சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் இன்று இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய தலைவர் விளாடிமிர் புடினும் இன்று சீனா வந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேட்டோ உள்ளிட்ட மேற்கத்திய கூட்டணிகளின் செல்வாக்கைக் கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக, சீனா, ரஷ்யா மற்றும் 4 மத்திய ஆசிய நாடுகள் இணைந்து 2001 இல் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை நிறுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.