17.8 C
Scarborough

‘அவதூறுகளை இனியும் எமது கட்சி பொறுத்து கொள்ளாது’; நாமல் காட்டம்

Must read

தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான அவதூறு பிரசாரங்களை இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) பொறுத்துக்கொள்ளாது என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற நடைமுறைகள் தொடர அனுமதிக்காது என்றும் அந்த கட்சி தெரிவித்துள்ளது.

கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய SLPP தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, “தங்கக் குதிரைகள்”, துபாய் மேரியட் ஹோட்டல், உகண்டாவில் உள்ள நிதி மற்றும் ரொக்கெட்டுகள் உள்ளிட்ட கடந்த கால குற்றச்சாட்டுகளை மேற்கோள் காட்டி, ராஜபக்ச குடும்பத்தினர் மீது மீண்டும் மீண்டும் சுமத்தப்படும் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அத்துடன் சமீபத்திய கொள்கலன் சர்ச்சை தொடர்பாக இப்போது ஒரு புதிய அவதூறு பிரசாரம் வெளிவந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி மாதம் கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் ஆய்வுசெய்யப்படாமல் விடுவிக்கப்பட்டமை குறித்து அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியதோடு, மேலும் நாட்டிற்குள் என்னென்ன பொருட்கள் கொண்டு வரப்பட்டன என்பதை அதிகாரிகள் வெளியிட வேண்டும் என்றும் கோரினார்.

ரசாயனங்கள் ஏற்றிச் செல்லும் கொள்கலன்கள், சோதனை இல்லாமல் விடுவிக்கப்பட்டவற்றுடன் தொடர்புடையவை என்ற நியாயமான சந்தேகம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், நுவரெலியாவில் நிலம் எவ்வாறு ஐஸ் போதை பொருள் உற்பத்திக்காக ஒதுக்கப்பட்டது என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் கோரினார்.

அதிகரித்து வரும் வன்முறை அலை மற்றும் பாதாள உலக துப்பாக்கிச் சூடுகளைத் தடுக்க அரசாங்கம் தவறிவிட்டதாக நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டியதோடு பொது பாதுகாப்பை மீட்டெடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினார்.

அத்துடன் விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் மற்றும் அவற்றில் உள்ள பொருட்களின் விபரங்களை வெளியிடுமாறு அவர் அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article