வர்த்தக வரி விதிப்பு தொடர்பாக 12 நாடுகளுக்கான உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். எந்தெந்த நாடுகள் என்ற விவரம் நாளை வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்தியா உடனான ஒப்பந்தம் கையெழுத்தாகாத நிலையில், மேலதிக வரி விதிக்கப்பட்டால் பதில் வரி விதிக்க இந்திய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக 2-வது முறையாக கடந்த ஜனவரி 20-ம் திகதி டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்றார். அமெரிக்காவுக்கு, இந்தியா உட்பட உலக நாடுகள் தங்கள் நாட்டு பொருட்களுக்கு அதிக வர்த்தக வரி விதிப்பதாக தெரிவித்தார்.
இதற்கு பதிலடியாக பரஸ்பர வரி விதிக்கப்படும் என அறிவித்த அவர், கடந்த ஏப்ரல் 2-ம் திகதி அதற்கான பட்டியலையும் வெளியிட்டார். இதில் இந்திய பொருட்களுக்கு 26% வரி விதிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.
எனினும், இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தன. இதையடுத்து, இடைக்கால ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள ஏதுவாக பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார் ட்ரம்ப். இதையடுத்து, அமெரிக்காவுடன் பல நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. 90 நாள் காலக்கெடு எதிர்வரும் 9-ம் திகதி நிறையவடைய உள்ள நிலையில், பிரிட்டன், வியட்நாம் ஆகிய 2 நாடுகளுடன் மட்டுமே அமெரிக்கா வரி விதிப்பு தொடர்பாக ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
இந்நிலையில் இந்தியா தமது பொருட்களுக்கும் பதில் வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.