கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு வருகை தருபவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு 25.2% குறைந்துள்ளது, ஜூலை மாதத்தில் மாத்திரம் கார் மூலம் வருகை தருபவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 37% குறைந்துள்ளதாக சுற்றுலா பொருளாதாரம் தெரிவித்துள்ளது.
“கனடியர்கள் ஏற்கனவே தங்கள் தனிப்பட்ட நிதி குறித்து கவலை கொண்டிருந்தனர், ஆனால் அமெரிக்க நிர்வாகத்தின் கொள்கை அறிவிப்புகளை அவர்கள் மிகவும் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டனர்,” என்று கனேடிய நுகர்வோரை தொடர்ந்து கணக்கெடுத்து வரும் சந்தை ஆராய்ச்சி நிறுவனமான லாங்வுட்ஸ் இன்டர்நேஷனலின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அமீர் ஐலான் கூறியுள்ளார்.
“துரதிர்ஷ்டவசமாக, விஷயங்கள் மோசமாகிவிட்டன,” என்று அவர் மேலும் கூறினார்.
‘அதிருப்தியடைந்த கனடியர்கள் அமெரிக்காவிற்குச் செல்வதற்குப் பதிலாக தங்கள் சொந்த நாட்டிற்குள் பயணிக்க அல்லது பிற நாடுகளுக்கு விமானங்களை முன்பதிவு செய்யத் திட்டமிட்டுள்ளனர்’
“அவர்கள் மெக்சிகோ, கரீபியன் மற்றும் மேற்கு ஐரோப்பா போன்ற இடங்களைத் தேர்வு செய்கிறார்கள்,” என்று ஐலான் கூறினார்.
இதேநேரம் கனடா மக்கள் மட்டுமன்றி புவிசார் அரசியல் மற்றும் கொள்கை தொடர்பான கவலைகளும் மேற்கு ஐரோப்பா மற்றும் ஆசியாவிலிருந்து வரும் பார்வையாளர்களின் குறைப்புக்கு வழிவகுத்தன என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
அமெரிக்காவிற்கு வெளிநாட்டு வருகை தொடர்ச்சியாக மூன்று மாதங்களாக குறைந்துள்ளது, இதில் ஜூலை மாதத்தில் 3.1% சரிவு ஏற்பட்டதாக பதிவாகியுள்ளது.
டிசம்பரில், 2025 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு ஒட்டுமொத்த சர்வதேச வருகையில் தோராயமாக 9% அதிகரிப்பு இருக்கும் என்று கணைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது 8.2% சரிவை எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..