அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்திலுள்ள டைம்ஸ் ஸ்கொயரில் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் 40ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது 12 அடி உயர வெண்கல சிலை திறக்கப்பட்டுள்ளது.
போர்த்துகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 5ஆம் திகதி தனது 40ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் பல்வேறு வகையான கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அவரது பிறந்த நாளன்று நியூயார்க்கின் புகழ்பெற்ற டைம்ஸ் ஸ்கொயர் பகுதியில் ரொனால்டோவின் 12 அடி உயரமுள்ள முழு உருவ வெண்கல சிலையானது அவரது ரசிகர்களால் திறக்கப்பட்டுள்ளது.
போட்டியில் கோல் அடித்த பின்னர் அதனை கொண்டாடும் விதமாக ரொனால்டோ பின்னப்பற்றி வரும் ‘சியூ’ எனும் செய்கையை குறிப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை இத்தாலிய கலைஞரான செர்ஜியோ ஃபுர்னாரி என்பவர் உருவாக்கியுள்ளார்.
முன்னதாக, போர்த்துகல் நாட்டின் தேசிய அணிக்காக விளையாடி வரும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி அரேபியாவின் அல் நாசர் அணிக்காகவும் விளையாடி வருகிறார். கால்பந்து உலகின் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் “பாலோன் தி ஓர்“ விருதை இவர் 5 முறை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.