நடிகர் திலகம் சிவாஜி கணேசன், அவருக்குப் பின் கமல்ஹாசன் என்கிற வரிசையில் நடிப்புக்காகப் பேசப்படும் தற்கால நடிகர்கள் பலருண்டு. அவர்களில் சியான் விக்ரமுக்கு தனித்துவம் மிக்கவர். அந்தத் தனித்துவம் வேறொன்றும் அல்ல; கொடுக்கும் கதாபாத்திரமாக மாறிக்காட்டும் அதிசயத்தை நிகழ்த்திவிடும் அவருடைய நடிப்பாற்றல்தான். கடைசியாக ‘தங்கலான்’ படத்தில் அவர் காட்டியிருந்த உழைப்பு பெரிதும் கொண்டாடப்பட்டது.
ஆனால், வணிக ரீதியாக அப்படம் வெற்றிபெறவில்லை. என்னதான் திறமையான கலைஞன் என்றாலும் வசூல் வெற்றிதான் எந்தவொரு ஹீரோவையும் உயிர்ப்புடன் வைத்திருக்கும். அப்படியொரு வெற்றிக்காக சியான் விக்ரம் கடந்த பல வருடங்களாகக் காத்திருந்தார். அவரின் காத்திருப்பை ‘வீர தீர சூரன்’ படம் நிறைவேற்றும் என்று கூறி வருகிறார்கள் விக்ரமின் வெறித்தனமான ரசிகர்கள். அப்படி அந்தப் படத்தில் என்ன இருக்கிறது என்பதை, நேற்று நடந்த அப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட விக்ரம் உள்ளிட்ட கலைஞர்கள் உடைத்துப் பேசினார்கள். அதைத் தெரிந்துகொள்ளும் படக்குழு குறித்த விவரங்களைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.
ஹெச்.ஆர். பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கியிருக்கும் படம் இது. இதில் ‘சீயான்’ விக்ரம், எஸ். ஜே. சூர்யா , சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வழக்கமாக ஒரு படம் வெளிவந்தவுடன் அதன் 2ஆம் பாகம் வெளியாகும். அதன்பிறகு அடுத்தடுத்த பாகங்கள் வெளிவந்தபடி இருக்கும். ஆனால், தமிழ் சினிமாவில் ஒரு புதுமைபோல் உருவாகி இருக்கும் ‘வீர தீர சூரன்’ படத்தின் இரண்டாம் பாகம் முதலில் வெளியாகிறது.
வரும் 27ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் நிலையில் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா நிகழ்வில் சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் இயக்குநர் எஸ். யூ. அருண்குமார், நடிகர் பிருத்வி, இசையமைப்பாளர் ஜீ. வி. பிரகாஷ் குமார் கலை இயக்குநர் பாலசந்தர், ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், படத்தொகுப்பாளர் ஜி. கே. பிரசன்னா மற்றும் தயாரிப்பாளர் ரியா ஷிபு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
விக்ரமிடம் பாராட்டு பெற்ற எஸ்.ஜே.சூர்யா
இந்நிகழ்வில் வருகை தந்திருந்த அனைவரையும் தயாரிப்பாளர் ரியா ஷிபு, அவருக்கே உரிய பாணியில் உற்சாகமாக வரவேற்றார். பாடலாசிரியர் விவேக் பேசினார்: “மனதளவிலும், உடலளவிலும் நம்மால் முடியாது என்று சோர்ந்து போகும் எல்லாருக்கும் .. ஏதோ ஒரு புள்ளியில் விக்ரம் சார் தான் இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார். அவருடைய கலைப் பயணத்தை பற்றி நான் குறிப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. நான் கல்லூரியில் படித்த காலத்தில் ‘பிதாமகன்’ என்ற படத்தினைப் பார்த்து வியந்து போனேன். அப்போதே இவருக்குத் தேசிய விருது கிடைக்கும் என்று நண்பர்களுடன் பேசி இருக்கிறோம். அன்றிலிருந்து ..இன்று அவருடன் இணைந்து பணியாற்று வரை நான் பயணித்திருக்கிறேன்” என்றார்.
ஆந்திராவில் விக்ரமின் மார்கெட்!
நடிகர் பிருத்வி பேசுகையில்: ”ஆந்திரத் திரையுலகில் பவன் கல்யாணுக்கு என்ன ஓப்பனிங் உள்ளதோ.. அதே அளவிற்கு இங்கு விக்ரமிற்கும் ஓப்பனிங் உள்ளது” என்றார். படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருக்கும் துஷாரா விஜயன் பேசுகையில், ” மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இது எனக்கு மிகப்பெரிய மேடை என நினைக்கிறேன். விக்ரம் சார் நடித்த படங்களைப் பார்த்து இன்ஸ்பயர் ஆகியிருக்கிறேன். சினிமாவுக்காக அவருடைய அர்ப்பணிப்பு என்பது போற்றத்தக்கது. அவருடைய உழைப்பு… அனைவருக்கும் மோட்டிவேஷனலாக இருக்கும்” என்றார்.
மலையாளப் படவுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு பேசுகையில், ” எனக்குத் தமிழும், தமிழ் சினிமாவும் மிகவும் பிடிக்கும். நான் தற்போது தமிழைப் பேச கற்றுக் கொண்டிருக்கிறேன். இதற்கு முக்கிய காரணமே இயக்குநரும், இந்தப் படக் குழுவினரும் தான். இந்தப் படம் வெளியான பிறகு இயக்குநருக்கு நான் மலையாளம் சொல்லித் தருவேன்.
‘இது ‘சித்தா’ இயக்குநர் அருண் குமார் படம்’
விக்ரம் சார் மிகப் பெரிய நடிகர் என அனைவருக்கும் தெரியும். அவருடன் நடிக்கும்போது அவர் நடித்த கதாபாத்திரங்கள் எனக்கு வரிசையாக நினைவுக்கு வந்தது. அதுபோன்ற கதாபாத்திரத்தை எல்லாம் இவர் தானே நடித்தார்..! என்று அவரை நான் வியந்து பார்த்துக் கொண்டே இருப்பேன். விக்ரம் சார் ஐ லவ் யூ. நானும் உங்களின் ரசிகன் தான்” என்றார்.
இதுவொரு டார்க் பிலிம்!
இசையமைப்பாளர் ஜீ. வி. பிரகாஷ் குமார் பேசுகையில், ” சீயான் விக்ரமுடன் நான் இணைந்து பணியாற்றும் நான்காவது படம் இது. ‘தெய்வத்திருமகள்’, ‘தாண்டவம்’, ‘தங்கலான் ‘, ‘வீர தீர சூரன்’ இந்த நான்கு படங்களும் அழுத்தமான கதையம்சம் உள்ள படங்கள். இந்த நான்கு படங்களும் அவருக்கும், எனக்கும் சவாலானதாக இருந்தது. அவருடன் இணைந்து பணியாற்றும்போது சவாலாக இருக்கும் என்பதால் சந்தோஷத்துடன் பணியாற்றுவேன்.
அருண்குமாருடன் முதல் முறையாக இணைந்திருக்கிறேன். மிகவும் திறமைசாலி. இது ஒரு டார்க்கான பிலிம். இந்தப் படத்திற்காக ‘அசுரன்’ படத்தின் தொனியில் பின்னணி இசை அமைத்திருக்கிறேன். மிகவும் சவாலானதாக இருந்தது. ஒவ்வொரு மியூசிக்கல் ஸ்கோரும் மூன்று நிமிடம் நான்கு நிமிடம் எனத் தொடர்ந்து இருக்கும். படம் பார்க்கும்போது இந்த பின்னணி இசை உங்களுக்குப் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். மார்ச் 27ஆம் தேதி வெளியாகும் ‘வீர தீர சூரன்’ படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்தப் படம் நிச்சயம் வெற்றி அடையும்” என்றார்.
எஸ். ஜே. சூர்யா பேசும்போது: ” இந்தப் படம் ‘டிபிகல்’லான அருண்குமாருடைய படம். அருண்குமார் மார்ட்டின் ஸ்கோர்செஸியின் ரசிகர். ஒரு ஆங்கிலத் தரத்தில்.. தமிழ் மண்ணில் எடுக்கப்பட்ட ஒரு தமிழ்ப் படம் . மிக அற்புதமான படம். இந்தப் படத்தில் நடிக்கும் போது மிகவும் ரசித்தேன். இந்தப் படத்தில் நீங்கள் புது எஸ் ஜே சூர்யாவை பார்ப்பீர்கள்.
’விக்ரமுடன் இது 4வது படம்’
நான் எப்போதும் என்னை இயக்குநர்களிடம் ஒப்படைத்து விடுவேன் . அவர்களுக்கு என்ன தேவையோ ..! அதை நான் அப்படியே கொடுத்து விடுவேன். ‘இறைவி’யில் ஆரம்பித்த அந்தப் பயணம்.. இன்று இந்த உயரத்திற்கு வந்திருக்கிறது. குணச்சித்திர நடிகர் என்பது ஒரு ரூட் . நான் எப்போதும் வில்லன். ஹீரோ. கதையின் நாயகன் …எதிர் நாயகன் … ஆனால் நாயகன்.
வீர தீர சூரன் படம் தரமான சம்பவமாக வந்திருக்கிறது. இந்தப் படத்தில் அனைவரும் இயக்குநருக்கு என்ன வேண்டுமோ..! அதனை மையப்படுத்தி உழைத்திருக்கிறோம். ரியா ஷிபு – ஷிபு தமீன்ஸ் – துஷாரா விஜயன் – பிருத்விராஜ் – சுராஜ் வெஞ்சரமூடு – ஜீ வி பிரகாஷ் குமார் – மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
சீயான் விக்ரமுடன் நான் இணைந்து பணியாற்றும் முதல் படம் இது. அவர் தமிழ் சினிமாவின் கௌரவம். மிகச் சிறந்த நட்சத்திர நடிகர். இந்தப் படத்தில் அவர் கடினமாக உழைத்திருக்கிறார். இப்படத்தில் நான் பின்னணி பேசிய விதத்தை தொலைபேசி மூலம் அழைத்து ஒரு மணி நேரம் விக்ரம் சார் என்னைப் பாராட்டினார். இது இந்தப் படத்தில் நான் நடித்ததற்காகக் கிடைத்த முதல் விருது. இதற்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் ” என்றார்.
இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் பேசுகையில், ”நான் ‘தூள்’ திரைப்படத்தை மதுரை சிந்தாமணி திரையரங்கத்தில் பார்த்திருக்கிறேன். அவரை இயக்குவதற்குக் கிடைத்த வாய்ப்பிற்காக ‘சீயான்’ விக்ரமுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் 62 ஆவது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் . ஆனால் இப்போதும் ஒரு காட்சியின் போது என்ன? எப்படி நடிக்க வேண்டும் எனக் கேட்கிறார். ‘என்னப்பா செய்யணும்..?’ என்று அவர் கேட்பது என்னைப் பயமுறுத்தும். அதற்கு நான் முதலில் தயாராகி இருக்க வேண்டும். ஏற்கனவே விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கி இருக்க வேண்டும். அந்த வாய்ப்பு தற்போது கிடைத்திருக்கிறது” என்று நெகிழ்ந்தார்.
தயாரிப்பாளர் ரியா ஷிபு
படத்தின் நாயகன் சீயான் விக்ரம் பேசுகையில், ”நான் படத்தைப் பற்றிப் பேசுவதை விடப் படம் உங்களிடம் நிறையப் பேசும். நாங்கள் சொல்ல வேண்டிய விசயங்கள் அனைத்தும் படத்தில் இருக்கிறது. பார்த்து மகிழ்ச்சி அடையுங்கள். ‘சித்தா’ என்றொரு படத்தைப் பார்த்தேன். அந்தப் படத்தை பார்த்த பிறகு, இயக்குநர் அருண் குமார் என்று அழைத்ததை விட ‘சித்தா’ என்றுதான் அழைத்திருக்கிறேன். அந்த அளவிற்கு அந்தப் படம் என்னை பாதித்தது. ‘சித்தா’ சிறந்த படம். அவர் எந்த படத்தை இயக்கினாலும்.. அதை வித்தியாசமாக இயக்குகிறார். ‘சித்தா’ படத்தை பார்த்த பிறகு இவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என தீர்மானித்தேன். அதுதான் வீர தீர சூரன்.
என்னுடைய ரசிகர்கள் நீண்ட நாட்களாகச் சீயான் விக்ரம் வேற மாதிரியான படங்களில் நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள். அதுபோன்ற படத்தில் நடிக்க வேண்டும் என்று நானும் காத்திருந்தேன். அதற்காக முயற்சி செய்து கொண்டு தான் இருந்தேன். இயக்குநர் சொன்ன கரு எனக்குப் பிடித்திருந்தது. அவருடைய ஸ்டைலும் எனக்குத் தெரியும். நாங்கள் இருவரும் ஒரே அலைவரிசையில் இருந்தோம்.
ரசிகர்களுக்காக ரகளையான ஒரு படம் . ஆனால் ஒரு எமோஷனலான படம். ‘சேதுபதி’ மாதிரி இருக்க வேண்டும்… அதில் ‘சித்தா’ போன்றதொரு விசயம் இடம் பிடித்திருக்க வேண்டும் என நினைத்தேன். அந்த மாதிரிப் படம்தான் வீர தீர சூரன். ரசிகர்களுக்காக உருவாகி இருக்கும் திரைப்படம்” என்று படத்தில் தன்னுடன் நடித்த ஒவ்வொரு நடிகர்களின் பங்களிப்பையும் குறிப்பிட்டுப் பாராட்டினார்.