19.5 C
Scarborough

வருண் சக்ரவர்த்தியின் 5 விக்கெட் குவியல் வீண்போனது ; இந்தியாவை 3ஆவது ரி20யில் வீழ்த்தியது இங்கிலாந்து

Must read

இந்தியாவுக்கு எதிராக ராஜ்கொட், சௌராஷ்ட்ரா கிரிக்கெட் சங்க விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற 3ஆவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 26 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

எனினும் முதலிரண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற இந்தியா, 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் 2 – 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது.

மூன்றவாது போட்டியில் இந்திய சுழல்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்தபோதிலும் அது இந்தியாவுக்கு பலன்தராமல் போனது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இங்கிலாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றது.

மொத்த எண்ணிக்கை 7 ஓட்டங்களாக இருந்தபோது ஆரம்ப வீரர் பில் சோல்ட் (5) ஆட்டம் இழந்தார்.

எனினும் பென் டக்கட், அணித் தலைவர் ஜொஸ் பட்லர் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 76 ஓட்டங்களைப் பகிர்ந்ததால் இங்கிலாந்து உற்சாகம் அடைந்தது.

டக்கட் 28 பந்துகளில் 7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 51 ஓட்டங்களையும் பட்லர் 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

மத்திய வரிசையில் லியாம் லிவிங்ஸ்டோன் 25 பந்துகளில் ஒரு பவுண்டறி, 5 சிக்ஸ்களுடன் 43 ஓட்டங்களைக் குவித்தார்.

பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி 24 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ஹார்திக் பாண்டியா 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

172 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா, 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 145 ஓட்டங்களைப் பெற்றது.

மத்திய வரிசை வீரர் ஹார்திக் பாண்டியா ஆரம்பத்தில் நிதானத்துடனும் பின்னர் வேகமாகவும் துடுப்பெடுத்தாடி 40 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.

அவரைவிட ஆரம்ப அதிரடி வீரர் அபிஷேக் ஷர்மா 24 ஓட்டங்களையும் திலக் வர்மா 18 ஓட்டங்களையும் அக்சார் பட்டேல் 15 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஜெமி ஓவட்டன் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்றைடன் கார்ஸ் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜொவ்ரா ஆச்சர் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article