நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதாக கூறி ஆட்சி ஏறியவர்கள் தற்போது அவற்றை பலப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை குறிப்பிட்டார்.
புதிய அரசாங்கம் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக தெரிவித்தது. ஆனால் தற்போது புதிய அரசியலமைப்பை உருவாக்க உள்ளதாக தெரிவிக்கின்றது.
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்பு உரிமைகள் ரத்து செய்யப்பட்டன அவை அரசியல் பழிவாங்கல் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவை முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும் பழிவாங்கல் நோக்கில் மேற்கொள்ளப்படக்கூடாது.
குறிப்பாக முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் அதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும்.
அரசாங்கத்தின் அனுமதியுடன் எவ்வித சோதனைகளும் இன்றி 323 கொள்கலன்கள் துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்டன.
அவற்றிலே போதை பொருட்கள் இருப்பதாக சர்வதேச நிறுவனங்கள் எச்சரித்திருந்த நிலையிலும் அதை உதாசீனப்படுத்தி அவற்றை எவ்வித சோதனைகளும் இன்றி விடுவிப்பதற்க்கு அரசாங்கம் தீர்மானித்தது.
அவற்றிலிருந்தே அண்மையில் பெரும் அளவிலான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

