தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பெரிய படங்களுக்கு இசையமைத்து வருவதுடன் மட்டுமல்லாது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் வெளியான ஜி.வி. பிரகாஷின் 25வது படமான “கிங்ஸ்டன்’ கலவையான விமர்சனத்தை பெற்றது.
இதைத்தொடர்ந்து ‘பிளக்மெயில்’ என்ற படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளார். இப்படத்தை மு.மாறன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் கதாநாயகியாக தேஜு அஸ்வினி நடித்துள்ளார். இந்த படத்தில் ஸ்ரீகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், நடிகர்கள் பிந்து மாதவி, வேட்டை முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக் ஹரி பிரியா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். ‘பிளக்மெயில்’ திரைப்படம் ஆகஸ்ட் முதலாம் திகதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றிருக்கிறது. விழாவில் ஜி.வி.பிரகாஷ். “பிளக்மெயில் ஒரு இன்ட்ரஸ்டிங்கான கதை. மாறன் சார் கதை சொல்லும்போதே எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது. அவர் மிகவும் திறமையான ஒரு இயக்குநர்.அவருடைய குரு கே.வி ஆனந்த் சார் மாதிரி நல்ல இடத்திற்கு செல்வார். இந்தப் படத்தில் எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் நிச்சயமாக வெற்றி பெறும். படக்குழுவினருக்கு நன்றி” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.