14 C
Scarborough

பங்களாதேஷ் ஒருநாள் அணிக்கு புதிய தலைவர்

Must read

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து பங்களாதேஷ் ஒருநாள் அணியின் தலைவராக சகலதுறை வீரர் மெஹிதி ஹசன் மிராஸ் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இம்மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் T20I தொடர்களிலும் விளையாடவுள்ளது. இதன்மூலம் பங்களாதேஷ் அணியானது 4 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரு தரப்பு தொடரில் விளையாடவுள்ளது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 17ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இதில் விளையாடவுள்ள பங்களாதேஷ் அணியானது நேற்றைய தினம் (12) நாட்டை வந்தடைந்தனர்.

இதனிடையே, இலங்கை அணிக்கெதிராக நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20I தொடர்களில் ஆடவுள்ள பங்களாதேஷ் அணியானது விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அடுத்த 12 மாதங்களுக்கு பங்களாதேஷ் ஒருநாள் அணியின் தலைவராhக சகலதுறை வீரர் மெஹிதி ஹசன் மிராஸ் நியமிக்கப்படுவதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை நேற்று அறிவித்துள்ளது.

முன்னதாக பங்களாதேஷ் ஒருநாள் மற்றும் T20I அணிகளின் தலைவராக நஜ்முல் ஹொசைன் சாண்டோ செயல்பட்டு வந்த நிலையில், அண்மையில் நடைபெற்று முடிந்த ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் அந்த அணியானது எதிர்பார்த்தளவு பிரகாசிக்கவில்லை.

மேலும், நஜ்முல் ஹொசைனும் தனது தலைவர் பதவியை இராஜினாமா செய்ததாக அறிவிப்புகள் வெளியானது. அதேபோல, துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்துவதற்காக அவர் T20I அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகிக் கொண்டார். இந்தப் பின்னணியில் தான் தற்சமயம் மெஹிதி ஹசன் மிராஸ் பங்களாதேஷ் ஒருநாள் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பங்களாதேஷ் ஒருநாள் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் மெஹிதி ஹசன் கூறுகையில், ‘ஒவ்வொரு வீரருக்கும், தங்களது அணியை வழிநடத்த வேண்டும் என்ற கனவு இருக்கும். அந்தவகையில் ஒருநாள் பங்களாதேஷ் ஒருநாள் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதை, கௌரவமாக கருதுகிறேன்,’ என்றார்.

முன்னதாக, இவர் 4 ஒருநாள் போட்டிகளில் பங்களாதேஷ் அணியின் இடைக்கால தலைவராகப் பணியாற்றியுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

27 வயதான மெஹதி ஹசன் மிராஸ் இதுவரை 105 ஒருநாள் போட்டிகளில் 1617 ஓட்டங்களையும், 110 விக்கெட்டுகளையும் குவித்துள்ளார். பங்களாதேஷ் அணியின் நட்சத்திர வீரர்களான மொஹமட் ரஃபீக், மஷ்ரஃபி மோர்டாசா மற்றும் சகிப் அல் ஹசன் போன்ற வீரர்கள் வரிசையில், ஒருநாள் போட்டிகளில் 1000 ஓட்டங்கள் மற்றும் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலிலும் ஒருவராக இடம்பிடித்துள்ளார். அதேபோல, ஐசிசி இன் ஒருநாள் சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் 4ஆவது இ;டத்திலும் அவர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article