நியூயோர்க் டைம்ஸ் செய்தித்தாளுக்கு எதிராக டொனால்ட் டிரம்ப் தொடர்ந்த 15 பில்லியன் டொலர் அவதூறு வழக்கை, அது தாக்கல் செய்யப்பட்ட விதத்தை காரணம் காட்டி நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார்.
பிரபல ‘நியூயார்க் டைம்ஸ்’ செய்தித்தாள், அதன் நான்கு செய்தியாளர்கள் மற்றும் பதிப்பகம் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 15 பில்லியன் டொலர் நஷ்ட ஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
நியூயார்க் டைம்ஸ் செய்தியாளர்கள் எழுதிய புத்தகம் மற்றும் தனது நிதிநிலை குறித்த கட்டுரைகள் பொய்யானவை என்றும் தனது புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்குடன் வெளியிடப்பட்டவை எனவும் டிரம்ப் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், அதிபர் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் முயற்சி இது என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், 85 பக்கங்கள் கொண்ட இந்த வழக்கை விசாரித்த புளோரிடா மாகாண மத்திய நீதிமன்ற நீதிபதி ஸ்டீவன் மெரிடே, அதனைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்குக்கான மனு சட்ட விதிகளைப் பின்பற்றாமல், தேவையற்ற வசைபாடும் வார்த்தைகளுடன் மிக நீளமாக உள்ளது. ‘நீதிமன்றம் என்பது அரசியல் பேரணிகளில் பேசுவதற்கான மேடையோ, விளம்பரத்திற்கான ஒலிபெருக்கியோ அல்ல’ என்று நீதிபதி தனது உத்தரவில் கடுமையாக கண்டித்துள்ளார்.
இருப்பினும், இந்த வழக்கை முழுமையாக முடித்து வைக்காமல், 28 நாட்களுக்குள் 40 பக்கங்களுக்கு மிகாமல், கண்ணியமான முறையில் திருத்தப்பட்ட புதிய மனுவைத் தாக்கல் செய்ய டிரம்பின் வக்கீல் குழுவுக்கு நீதிபதி அவகாசம் வழங்கியுள்ளார். நீதிபதியின் இந்த உத்தரவை வரவேற்பதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

