19.8 C
Scarborough

நடிகை சரோஜா தேவி மறைவு – தமிழக முதல்வர் இரங்கல்!

Must read

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, இன்று (14) தனது 87ஆவது வயதில் காலமானார்.

இவரின் மறைவையொட்டி திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கலும் அஞ்சலியும் செலுத்தி வருகின்ற நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

குறித்த இரங்கல் செய்தியில், தென்னிந்தியத் திரையுலகின் பழம்பெரும் நடிகையான சரோஜாதேவி மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், ஜெமினி கணேசன் முதலிய உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து இரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படும் பல மறக்க முடியாத வெற்றிப் படங்களை அளித்தவர் சரோஜாதேவி.

தமது அழகிய முகபாவங்களாலும் நளினமான நடிப்பாலும் ‘அபிநய சரஸ்வதி’ எனப் புகழப்பட்டவர். நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும், கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா, உன்னை ஒன்று கேட்பேன், லவ் பேர்ட்ஸ், தொட்டால் பூ மலரும், ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என எத்தனையோ இனிய பாடல்களுக்குத் தமது நடிப்பால் பொலிவூட்டி தமிழ் மக்களின் நெஞ்சினில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் சரோஜாதேவி அம்மையார் அவர்கள்.

சுமார் 200 திரைப்படங்களில் நடித்து, இந்தியத் திரையுலகிற்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காக பத்மஸ்ரீ, பத்மபூஷன், இந்திய அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது என எண்ணற்ற பெருமைகளைப் பெற்றவர். எப்போதும் இனிய முகத்துடனும், கனிவான பேச்சுடனும் காணப்படும் சரோஜாதேவி அவர்களின் மறைவு எளிதில் ஈடுசெய்ய முடியாதது.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும், அவரது இரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article