இலங்கை கிரிக்கெட் அணியின் சகலத்துறை ஆட்டக்காரராக துனித் வெல்லலகே, தான் ஒரு வெற்றிகரமான கிரிக்கெட் வீரராக மாறுவது தான் தனது மறைந்த தந்தையின் மிகப்பெரிய விருப்பம்என்றும், அந்தக் கனவை நிறைவேற்ற உறுதியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
தனது தந்தையின் திடீர் மறைவுக்குப் பிறகு ஆசியக் கிண்ண போட்டியின் போது நாடு திரும்பிய வெல்லலகே, இன்று (20) காலை மீண்டும் இலங்கையை விட்டு வெளியேறி தனது அணியினருடன் மீண்டும் இணைவதற்கு முன்பு இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
வெல்லலகே தனது தந்தை குறித்துப் பேசுகையில்,
“என்னுடைய சிறு வயதிலிருந்தே என் தந்தை நிபந்தனையின்றி என்னை ஆதரித்து வருகிறார். நான் ஒரு நல்ல வீரராக வளர்ந்து இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பதே அவரது ஒரே கனவு. அதை நான் முன்னோக்கி எடுத்துச் செல்வேன். ஆசியக் கிண்ணத்தில் இன்னும் முக்கியமான போட்டிகள் மீதமுள்ளன, மேலும் அணிக்காக அனைத்து தியாகங்களையும் செய்ய விரும்புகிறேன்.”
தலைமை பயிற்சியாளர் சனத் ஜெயசூர்ய, கேப்டன் சரித் அசலங்க, சக வீரர்கள் மற்றும் பரந்த இலங்கை சமூகத்தினரிடமிருந்து பெற்ற ஊக்கம், இந்தக் கடினமான தருணத்தை தைரியத்துடனும் நன்றியுடனும் எதிர்கொள்ளும் வலிமையை அளித்துள்ளது என்றும் அவர் கூறினார்.
“காலை முதல் இரவு வரை, என் தந்தை எனது கிரிக்கெட் வாழ்க்கைக்காக தனது நேரத்தை அர்ப்பணித்தார். அவரது தியாகங்களால் தான் நான் இன்று ஒரு தேசிய வீரராக இங்கு நிற்கிறேன். அவரது விருப்பங்கள் என்னவென்று அறிவேன் அவற்றை நிறைவேற்ற நான் உறுதிபூண்டுள்ளேன்,” என்று வெல்லலகே கூறினார்.
முன்னாள் கிரிக்கெட் வீரரான சுரங்க வெல்லலகே, செப்டம்பர் 18 அன்று தனது 54 வயதில் திடீர் மாரடைப்பால் காலமானார் என தெரிவிக்கப்பட்டுளளது.
அபுதாபியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆசிய கிண்ண குரூப் பி போட்டியில் துனித் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அதே நாளில் அவரது தந்தையின் மரணம் நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.