கனடாவின் ஸ்குகோக் ஏரியில் உள்ள படகுத் துறைமுகத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் நின்று கொண்டிருந்த சமயத்தில் சிறிய விமானம் ஒன்று மோதியதில் குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளான்.
டர்ஹாம் பிராந்திய காவல்துறை ஆய்வாளர் கில் லாக்,வெள்ளிக்கிழமை நண்பகல் 12:30 மணிக்கு வில்லியம்ஸ் பாயிண்ட் அருகே உள்ள ஏரியில் விமான விபத்து இடம்பெற்றதாக தெரிவித்து அவசர சேவைகளுக்கு அழைப்பு வந்ததாக தெரிவித்தார்.
விமானம் மோதியபோது சிறுவன் துறைமுகத்தில் நின்று கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திலேயே சிறுவன் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. எனினும் அவரது அடையாளம் வெளியிடப்படவில்லை.
இதற்கிடையில், விமானி சிறு காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், மற்றுமொரு பயணி சம்பவ இடத்திலேயே சிகிச்சை பெற்றதாகவும் கில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.