இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) பஞ்சாப் கிங்ஸின் சகலதுறைவீரரான கிளென் மக்ஸ்வெல்லுக்கு வலது கையில் விரல் முறிவொன்று ஏற்பட்டுள்ளதுடன், எஞ்சிய தொடரை தவறவிடும் அபாயத்திலுள்ளார்.
சென்னை சுப்பர் கிங்ஸுடனான புதன்கிழமை (30) போட்டியின் நாணயச் சுழற்சியின்போது பிரதியீடுகள் பற்றி இன்னும் தீர்மானிக்கவில்லையென பஞ்சாப்பின் அணித்தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்தபோதும், விரைவில் தாங்கள் அதைச் செய்வோமென பின்னர் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பஞ்சாப்பின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ரிக்கி பொன்டிங் தெரிவித்திருந்தார்.
கொல்கத்தா நைட் றைடர்ஸுக்கெதிரான சனிக்கிழமை (26) போட்டிக்கு முன்பதாகவே மக்ஸ்வெல்லுக்கு விரலில் முறிவு ஏற்பட்டதாக பஞ்சாப்பின் மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் தெரிவித்ததுடன், பெரும்பாலும் இனித் தொடரில் விளையாட மாட்டார் எனக் குறிப்பிட்டிருந்தார்