தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கோயம்புத்தூரில் நடைபெற்றது.
இதில் சத்யராஜ், பார்த்திபன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.
இதில் அனைவருமே தனுஷின் இயக்கத்தைப் பற்றி பலரும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்கள்.
இந்த விழாவில் தனுஷ் பேசும்போது, “எனக்கு சமையல் கலை நிபுணராக வேண்டும் என்று தான் ஆசை. அந்த ஆசையினாலோ என்னவோ தொடர்ச்சியாக சமையல் சார்ந்த படங்களாக செய்து கொண்டிருக்கிறேன்.
‘ஜகமே தந்திரம்’ படத்தில் பரோட்டா, ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் டெலிவரி பாய், ‘ராயன்’ படத்தில் பாஸ்ட் ஃபுட், ‘இட்லி கடை’ படத்தில் இட்லி சுட்டுக் கொண்டிருக்கிறேன். நான் எழுதும் போது அப்படி தான் இருக்கிறது. எனக்கு வரும் கதைகளும் அப்படிதான் இருக்கின்றன. அதை தான் எண்ணம் போல் வாழ்க்கை என்பார்கள்.
இளைஞர்கள் நாம் என்னவாக வேண்டும் என்று நினைக்கிறோமோ அதை நம்பவேண்டும். நிஜத்தில் நடப்பது போலவே நினைக்க வேண்டும். அப்படி இருந்தால் கண்டிப்பாக சாதிக்க முடியும். உடற்பயிற்சி செய்தால் நீங்கள் நினைப்பதை சீக்கிரமாக அடைய முடியும்.
கருத்துச் சொல்றேன் என்று நினைக்காதீர்கள். என் வாழ்வில் நடந்ததை சொல்கிறேன். என் ரசிகர்கள் யாருடைய வம்புக்கும் செல்ல மாட்டார்கள். அதில் பெரிய கர்வமும், சந்தோஷமும் இருக்கிறது.
‘இட்லி கடை’ ஒரு சாதாரண படம். உங்களுடைய குடும்பத்துடன் சென்று சந்தோஷமாக, எமோஷனலாக பார்க்கும் வகையில் இருக்கும் என நம்புகிறோம். கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

