தனஞ்ஜய டி சில்வா தலைமையிலான இலங்கை அணிக்கும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான இரு போட்டிகள் கொண்ட ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் முதல் போட்டி இன்று (29) காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகிறது.
இலங்கைக்கு இருதரப்பு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸி. அணி இலங்கை கிரிக்கெட் அணியுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் இரு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது. டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பமாகும் நிலையில் ஒருநாள் தொடர் பெப்ரவரி 12ஆம் திகதி ஆரம்பமாகிறது.
ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்
மூன்றாவது ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் (2023 – 2025) போட்டிகள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் நடைபெற்று வருகிறது. சர்வதேச கிரிக்கெட் பேரவையானது டெஸ்ட் போட்டிகளுக்கும் ஒரு சம்பியனை தீர்மானிக்க வேண்டும் என்கின்ற அடிப்படையில் ‘ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்’ என்ற பெயரில் ஒரு தொடர் கடந்த 2019ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. குறித்த ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரானது இரண்டு வருடங்களில் நடைபெறுகிறது.
இரண்டு வருடங்களில் நடைபெறுகின்ற டெஸ்ட் போட்டிகளின் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தெரிவாகி, அந்த இரு அணிகளுக்கிடையில் நடைபெறும் இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணி டெஸ்ட் சம்பியன்ஷிப் பட்டத்தை சுவீகரிக்கும்.
முதல் டெஸ்ட் சம்பியன்ஷிப் பட்டத்தை கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், இரண்டாவது டெஸ்ட் சம்பியன்ஷிப் பட்டத்தை பெட் கம்மின்ஸ் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியும் சுவீகரித்தன.
இறுதிப்போட்டியில் ஆஸி. – தென்னாபிரிக்க அணிகள்
மூன்றாவது டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு அவுஸ்திரேலிய மற்றும் தென்னாபிரிக்க அணிகள் தகுதிபெற்றுள்ளன. தென்னாபிரிக்க அணி பாகிஸ்தானுடனான தொடரை வென்றதன் மூலமும், இறுதியாக அவுஸ்திரேலிய அணி இந்திய அணியுடனான தொடரை வென்றதன் மூலமும் இரு அணிகளும் இறுதிப்போட்டி வாய்ப்பை உறுதி செய்துள்ளன.
சம்பியனை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி எதிர்வரும் ஜூன் 11ஆம் திகதி இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்திய அணி இல்லாத முதல் டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2023 – 2025 டெஸ்ட் சம்பியன்ஷிப்பும், இலங்கை அணியும்
2023 – 2025 டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணி இதுவரையில் 11 போட்டிகளில் ஆடியுள்ளது. இதில் இலங்கை அணி ஆடிய 11 போட்டிகளில் தலா இரு ஆட்டங்கள் கொண்ட 4 தொடர்களிலும், 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு தொடரிலும் ஆடியிருக்கிறது.
கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலையில் சொந்த மண்ணில் நடைபெற்ற பாகிஸ்தானுடனான தொடரை 0-2 என்ற அடிப்படையில் இழந்த இலங்கை அணி, 2024 மார்ச்சில் பங்களாதேஷில் நடைபெற்ற அந்த அணியுடனான தொடரை 2-0 என்ற அடிப்படையில் கைப்பற்றியது. அதன் பின் கடந்த செப்டம்பரில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என இழந்திருந்தது. எனினும் நியூசிலாந்து அணியுடனான தொடரை 2-0 என கைப்பற்றி வரலாறு படைத்தது. இறுதியாக தென்னாபிரிக்க அணியுடனான தொடரை 0-2 என இழந்தது.
மூன்றாமிடத்தில் கைப்பற்றும் வாய்ப்பு
டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை இலங்கை அணி இழந்துள்ள நிலையில், அதிகபட்சமாக இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளை முந்தி மூன்றாமிடத்தை கைப்பற்றும் வாய்ப்பு இலங்கைக்கு காணப்படுகிறது. ஆஸி. அணியுடன் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றும் பட்சத்தில் இலங்கை அணி மூன்றாமிடத்தை பிடிக்கும். இதுவரையில் 11 போட்டிகளில் ஆடியுள்ள இலங்கை அணி 5 வெற்றி, 6 தோல்விகளுடன் 45.45 என்ற வெற்றி சதவீதத்துடன் ஐந்தாமிடத்தில் உள்ளது.
நடப்பு டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் கடைசி தொடர்
கடந்த 2023 ஜூன் மாதம் ஆரம்பமாகிய டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் அனைத்து போட்டிகளும் இந்த தொடருடன் நிறைவுக்கு வருகிறது. மூன்றாவது பருவகாலத்திற்கான தொடராக நடைபெற்ற இந்த தொடரில் 9 அணிகள் பங்கேற்ற நிலையில் மொத்தமாக 70 போட்டிகள் நடைபெற்றன. இதில் இலங்கை அணி தற்போது நடைபெறவுள்ள ஆஸி. அணியுடனான தொடரை சேர்த்து 6 அணிகளுடன் மோதின.
இரு அணிகளுடன் ஆடாத இலங்கை
2023 – 2025 டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுடன் இலங்கை அணி விளையாடவில்லை. எனினும் அடுத்து 4வது தொடராக நடைபெறவுள்ள 2025 – 2027 டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணி குறித்த இரு அணிகளுடனும் மோதுகிறது. இலங்கை அணிக்கு அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் மோதும் வாய்ப்பு அடுத்த டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் இல்லை.
இலங்கை – ஆஸி. அணிகளுக்கிடையில் நேருக்கு நேர்
இதுவரையிலான போட்டிகள்
கடந்த 1983ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கை – ஆஸி. அணிகளுக்கிடையில் வரலாற்று சிறப்புமிக்க முதல் டெஸ்ட் போட்டி இலங்கையின் கண்டி அஸ்கிரிய மைதானத்தில் நடைபெற்றது. குறித்த போட்டியில் ஆஸி. அணி இன்னிங்ஸ் மற்றும் 38 ஓட்டங்களினால் அபார வெற்றியீட்டியது.
அன்றிலிருந்து இன்று வரையில் இலங்கை – ஆஸி. அணிகளுக்கிடையில் 33 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் ஆஸி. அணி 20 போட்டிகளில் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தும் நிலையில், இலங்கை அணி வெறும் 5 போட்டிகளில் மாத்திரம் வெற்றி பெற்றுள்ளது. 8 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளன.
இறுதி ஐந்து போட்டிகள்
இரு அணிகளுக்கும் இடையில் இறுதியாக நடைபெற்ற 5 டெஸ்ட் போட்டிகள் தொடர்பில் அவதானம் செலுத்துகின்ற போது, ஆஸி. அணி 3 போட்டிகளிலும், இலங்கை அணி இரு போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.
இரண்டரை ஆண்டுகளின் பின் டெஸ்ட் மோதல்
அவுஸ்திரேலிய அணி கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் ஆடியது. இதில் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் நடைபெற்றது. தொடரின் முதல் போட்டியில் ஆஸி. அணி வெற்றிபெற, அடுத்த போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று தொடரை சமநிலைப்படுத்தியது. இந்நிலையில் இலங்கை – ஆஸி. அணிகள் இரண்டரை ஆண்டுகளின் பின்னர் டெஸ்ட் போட்டியில் சந்திக்கின்றன.
இருதரப்பு டெஸ்ட் தொடர்கள்
கடந்த 1983ஆம் ஆண்டிலிருந்து இன்று வரையில் இரு அணிகளுக்குமிடையில் 14 தொடர்கள் நடைபெற்றுள்ளன. இதில் ஆஸி. அணி 11 தொடர்களை வென்றுள்ள நிலையில், இலங்கை அணி வெறும் 2 தொடர்களை மாத்திரம் வென்றுள்ளது. இறுதியாக கடந்த 2022இல் நடைபெற்ற தொடர் மாத்திரம் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவடைந்தது.
டெஸ்ட் தொடரை வென்று எட்டு ஆண்டுகள்
இலங்கை அணி கடந்த 2016ஆம் ஆண்டு சொந்த மண்ணில் வைத்து ஆஸி. அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற அடிப்படையில் கைப்பற்றியதன் பின்னர் இதுவரையில் எட்டு ஆண்டுகளாக டெஸ்ட் தொடரைக் கைப்பற்றவில்லை. இடைப்பட்ட காலப்பகுதியில் இரு டெஸ்ட் தொடர்கள் நடைபெற்றுள்ளன. இதில் ஒரு தொடரை ஆஸி. அணியும், மற்றுமொரு தொடர் சமநிலையிலும் நிறைவடைந்தது.