ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-ல் பாகிஸ்தான் அணியின் சொதப்பலைத் தொடர்ந்து அந்த அணி மீது இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடும் அதிருப்தியையும் விமர்சனங்களையும் வெளிப்படுத்த அதற்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் பதிலடி கொடுத்துள்ளார்.
நேர்காணல் ஒன்றில் கவாஸ்கர் கூறும்போது, “இப்போதைய பாகிஸ்தான் அணியினால் இந்திய-பி அணியைக் கூட வெல்ல முடியாது” என்று காட்டமாகக் கூறியதுதான் சர்ச்சையாகியுள்ளது, “இந்திய-பி அணி கூட இந்த பாகிஸ்தான் அணிக்கு கடும் சவால் அளிக்கும், இப்போதைய பாகிஸ்தான் அணியினால் இந்திய-பி அணியை வெல்ல முடியாது” என்று கூறியிருந்தார்.
இதற்கு இன்சமாம் உல் ஹக் தன் பதிலில், “கொஞ்சம் புள்ளி விவரங்களைப் பாருங்கள் கவாஸ்கர். அவர் மூத்தவர், சீனியர் வீரர். அதனால் அவரை மிகவும் மதிக்கின்றேன். உங்கள் அணி நன்றாக ஆடியதா அதைப் புகழுங்கள், பாராட்டுங்கள் அதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது.
ஆனால், இன்னொரு அணியைப் பற்றி இழிவாகப் பேச உங்களுக்கு உரிமை இல்லை. நீங்கள் பிரயோகிக்கும் வார்த்தைகளில் கவனமாக இருங்கள் கவாஸ்கர். நான் இதனைக் கடுமையான தொனியில்தான் சொல்கிறேன். கவனமாக வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள்” என்று காட்டமாக பதிலளித்துள்ளார்.
கவாஸ்கர் விமர்சனம் செய்யும் போது, “ரிஸ்வான் முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்புகிறார், நாமும் சரி வித்தியாசமான ஆட்டம் வரும் போலிருக்கிறது என்று நிமிர்ந்து உட்கார்ந்தால் பேட்டர்கள் உடனே பந்துகளை மட்டை வைக்கத் தொடங்குகின்றனர். ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்வதில்லை, சிங்கிள்களைக் கூட எடுக்க முடியாமல் திணறுகின்றனர். இந்திய ஸ்பின்னர்கள் ஓவர்களை விரைவு கதியில் முடிக்கின்றனர். பாகிஸ்தான் பேட்டர்களுக்கு எந்த ஒரு அவசர உணர்வுமே இல்லை.
பாகிஸ்தானில் திறமைக்குப் பஞ்சமில்லை. இன்சமாம் உல் ஹக் போன்ற வீரரை உருவாக்க அவர்கள் ஏன் தடுமாறி வருகிறார்கள். பாகிஸ்தான் சூப்பர் லீக் அங்கு நடக்கிறது. ஆனால் அதிலிருந்து டாப் பேட்டர்கள் வர முடிவதில்லையே” என்று கவாஸ்கர் சொல்லி இருந்தார்.