“ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை அரசுக்கு இனியும் கால நீடிப்பு வழங்காது. பொறுப்புக்கூறல் தொடர்பான குற்றவியல் பொறுப்புத் தொடர்பான சர்வதேச விசாரணையை நோக்கி அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் விதத்தில் அடுத்த தீர்மானத்தில் தகுந்த தரமுயர்த்தல் மேற்கொள்ளப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
மேலும், அதுவே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்றும் சிறீதரன் தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் கனேடிய வெளிவிகார அமைச்சின் இந்தோ – பசுபிக் பிராந்தியங்களுக்கான பிரதி அமைச்சர் வெல்டன் எப் உள்ளிட்ட கனேடிய அரசியல் தரப்பினருக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பிலேயே இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் கனேடிய பிரதி அமைச்சரிடம் எழுத்து மூல கோரிக்கை ஒன்றையும் சமர்ப்பித்தார்.
அதில் இலங்கைத் தீவு தொடர்பான பொறுப்புக்கூறல் அர்த்தமுள்ளதாகுவதெனில் அதைப் மூன்று விதமாக அணுக வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
தலையாய சர்வதேசக் குற்றமான இன அழிப்புத் தொடர்பான பொறுப்புக்கூறல் மற்றும் இதர சர்வதேசக் குற்றங்களான போர்க்குற்றங்கள், மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்கள், சித்திரவதை, வலிந்து காணமலாக்கப்பட்டமை ஆகியவை பற்றிய பொறுப்புக்கூறல் , மேற்குறித்த குற்றங்கள் மீள்நிகழாமையை உறுதிப்படுத்தல் என்ற மூன்று காரணிகளை அடிப்படையாக கொண்டு இந்த விடயங்களை அனுக வேண்டும் என்பதையும் அவரின் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.