மலேசியாவில் நடைபெற்றுவரும் ஐ.சி.சி. இளையோர் (19 வயதுக்குட்பட்டோருக்கான) மகளிர் ரி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை மகளிர் அணி தங்களது இரண்டாவது ஆட்டத்தில் இன்று மேற்கிந்தியத் தீவுகள் இளையோர் மகளிர் அணியை எதிர்கொள்கிறது.
16 அணிகளின் பங்கேற்புடன் இரண்டாவது தடவையாக நடைபெற்றுவரும் ஐ.சி.சி. இளையோர் (19 வயதுக்குட்பட்டோருக்கான) மகளிர் ரி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் சனிக்கிழமை மலேசியாவில் ஆரம்பமானது. இதில் குழு ‘ஏ’யில் இடம்பிடித்துள்ள இலங்கை அணி தங்களது முதல் ஆட்டத்தில் நேற்று முன்தினம் கோலாலம்பூர், பயூமாஸ் ஓவல் மைதானத்தில் வைத்து மலேசியாவை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் இலங்கை அணி 139 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியீட்டியது.
இந்நிலையில், இலங்கை அணி இரண்டாவது ஆட்டத்தில் இன்று மே.இ. தீவுகள் மகளிர் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இலங்கை நேரப்படி காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகிறது.
மறுமுனையில் மே.இ. தீவுகள் மகளிர் அணி தங்களது முதல் ஆட்டத்தில் இந்தியாவிடம் படுதோல்வியடைந்த நிலையில் இன்றைய போட்டியில் வெற்றிபெறும் முனைப்பில் உள்ளது.
இலங்கை அணி தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் நாளை மறுதினம் வியாழக்கிழமை இந்திய இளையோர் மகளிர் அணியை எதிர்கொள்கிறது.