ஆசிய கிண்ண தொடரில் இன்று நடைபெறுகின்ற 6-வது லீக் ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் போட்டியிடுகின்றன
இரு நாட்டு உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டு இருக்கிற நிலையில் இரு அணிகளும் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.
இத்தகைய உணர்வுபூர்வமான சூழலில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மல்லுகட்டுவது கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி எல்லா தரப்பினர் மத்தியிலும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் தலைவரான சூர்யகுமார் யாதவ் வெற்றிக்கு மிக முக்கிய பங்கினை வகிப்பார் என இந்திய முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் தனது கருத்தை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது.
இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற சூரியகுமார் யாதவ் முக்கிய பங்கிணை வகிப்பார். ஒரு துடுப்பாட்ட வீரராக மட்டுமின்றி தலைவராகவும் அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
பந்துவீச்சாளர்களை அவர் பயன்படுத்தும் விதம் மிகச் சிறப்பாக இருந்து வருகிறது. குறிப்பாக இலங்கையில் நடைபெற்ற தொடரின் போது அவரும் பந்துவீசி விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
இப்படி அணிக்கு தேவைப்படும்போது பேட்ஸ்மேன்களையும் அவர் பந்துவீச அழைக்கிறார். இப்படி முக்கியமான வேளைகளில் அவர் எடுக்கும் முடிவுகள் இந்திய அணிக்கு சாதகமாக அமைந்து வருகின்றன.
அவரது ஸ்மார்ட் கேப்டன்சி இந்த ஆசிய கிண்ண தொடரிலும் நீடித்து வருகிறது. அதனால் இந்திய அணிக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு இருக்கிறது.
என்னை பொறுத்தவரை இந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவர் பேட்ஸ்மேனாக மட்டுமின்றி கேப்டனாகவும் அசத்தலான முடிவுகளை கையில் எடுப்பார். எனவே பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கான வெற்றியில் அவரது பங்கு மிகப்பெரிய ஒன்றாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.