17-வது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள டுபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டி நாளை (14-ம் திகதி) நடைபெற உள்ளது.
எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தால் இரு நாட்டு உறவுகளும் மேலும் மோசமடைந்துள்ள சூழலில் நடைபெறும் இந்த ஆட்டம் கவனிக்கத்தக்க ஒன்றாக அமைந்துள்ளது.
இந்திய அணி தனது முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை 57 ஓட்டத்தில் சுருட்டி எளிதில் வெற்றியை வசப்படுத்தியது. இந்த போட்டியில் இந்திய அணி பும்ராவை மட்டுமே முதன்மை வேகப்பந்து வீச்சாளராக கொண்டு களமிறங்கி விளையாடியிருந்தது. ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஷிவம் துபேவை பேக் அப் வேகப்பந்து வீச்சாளர்களாக பயன்படுத்தியது.
ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணிக்கு நிச்சயம் 2-வது முழுநேர வேகப்பந்து வீச்சாளர் அவசியம் என்று பல்வேறு முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக நட்சத்திர பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங்கை களமிறக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அர்ஷ்தீப் சிங் போட்டியாளர்களின் பட்டியலில் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு பதிலாக திலக் வர்ம அல்லது ஷிவம் துபே ஆகியோரில் ஒருவர் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்படலாம் என கூறப்படுகிறது.