இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் லண்டன் லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் மூன்றாவது அண்டர்சன் – டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரண்டு அணிகளும் முதல் இன்னிங்ஸில் சமமான ஓட்டங்களைப் பெற்றன.
முதலாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 387 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியாவும் சகல விக்கெட்களையும் இழந்து அதே மொத்த எண்ணிக்கையைப் பெற்றது.
போட்டியின் 3ஆம் நாள் காலை தனது முதல் இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 251 ஓட்டங்களில் இருந்து தொடர்ந்த இந்தியா சகல விக்கெட்களையும் இழந்து 387 ஓட்டங்களைப் பெற்றது.
கே. எல். ராகுலும் ரிஷாப் பான்டும் 4ஆவது விக்கெட்டில் 141 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ரிஷாப் பான்ட் 74 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். இந்தத் தொடரில் அவர் பெற்ற 4ஆவது 50க்கும் மேற்பட்ட ஓட்டங்கள் இதுவாகும்.
ராகுல் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி சரியாக 100 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். இது அவர் பெற்ற 10ஆவது டெஸ்ட் சதமாகும்.
மத்திய வரிசையில் மீண்டும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ரவிந்த்ர ஜடேஜா தனது 3ஆவது தொடர்ச்சியான அரைச் சதத்தைப் பூர்த்திசெய்தார்.
ரவிந்த்ர ஜடேஜாவும் நிட்டிஷ் குமார் ரெட்டியும் 7ஆவது விக்கெட்டில் சரியாக 50 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
நிட்டிஷ் குமார் ரெட்டி 30 ஓட்டங்களையும் வொஷிங்டன் சுந்தர் 23 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் கிறிஸ் வோக்ஸ் 84 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜொவ்ரா ஆச்சர் 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பென் ஸ்டோக்ஸ் 63 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 2 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.