அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்ற இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜேக் டிராப்பர் சம்பியன் பட்டம் வென்றார். மகளிர் ஒற்றையர் பிரிவில் நட்சத்திர வீராங்கனை சபலென்காவை வீழ்த்தி மிர்ரா ஆண்ட்ரீவா சம்பியன் பட்டத்தை வென்றார்.
பல முன்னணி வீர, வீராங்கனைகள் பங்கேற்றிருந்த குறித்த இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் கடந்த 3ஆம் திகதி ஆரம்பமானது. இந்த தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் பிரிட்டனின் ஜேக் டிராப்பர் மற்றும் டென்மார்க்கின் ஹோல்கர் ரூனே ஆகியோர் மோதினர். இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட டிராப்பர் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ஹோல்கர் ரூனேவை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்றார்.
மகளிர் பிரிவில் ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவா, நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்காவுடன் மோதினார். ஆரம்பம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் இரு செட்களை இருவரும் மாறி மாறி கைப்பற்றினர். மூன்றாவது செட்டில் அபாரமாக செயற்பட்ட மிர்ரா ஆண்ட்ரீவா 6-3 என்ற புள்ளிக்கணக்கில் சபலென்காவை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்றார்.