16.4 C
Scarborough

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் செய்யாததைச் செய்த நியூஸிலாந்து கிரிக்கெட் அணி!

Must read

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-ன் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்தி இந்திய அணி மூன்றாவது முறையாக கோப்பையைத் தட்டிச் சென்றது. ரோஹித் சர்மா தலைமையில் இப்போது 2 ஐசிசி கோப்பைகளை இந்தியா வென்றுள்ளது. டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி 2025 கோப்பைகளை ரோஹித் தலைமையில் வென்று தோனிக்கு அடுத்த இடத்தில் உள்ளார் ரோஹித்.

2011 உலகக் கோப்பையை வென்ற பிறகே ஐசிசி தொடரில் இந்திய அணி அதிகம் நாக் அவுட் சுற்றுகளுக்குத் தகுதி பெற்ற அணியில் நம்பர் 1 ஆக உள்ளது. ஆனால் இதற்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியாவோ, இங்கிலாந்தோ, தென் ஆப்பிரிக்காவோ, பாகிஸ்தானோ கூட இல்லை என்பதுதான் இதில் சுவாரஸ்யமான விஷயம்.

நியூஸிலாந்து அணிதான் 2011 உலகக் கோப்பைக்குப் பிறகு அதிக ஐசிசி தொடர் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்று வரும் 2-வது சிறந்த அணி என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் இதுதான் உண்மை. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற பணபலம், உள்கட்டமைப்பு பலம் இல்லாத நியூஸிலாந்து அணி 8 முறை ஐசிசி தொடர்களில் நாக் அவுட் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

அதாவது 2011-லிருந்து 12 ஐசிசி தொடர்கள் நடைபெற்றிருக்கிறது என்றால் 8 முறை நியூஸிலாந்து நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. 2015 ஆஸ்திரேலியாவில் நடந்த ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இறுதிக்குள் நுழைந்து ரன்னர்களாக முடித்தனர். 2019-ல் உலக சாம்பியன்கள் உண்மையில் இவர்கள்தான். ஆனால், சொத்தையான பவுண்டரி கணக்கு விதிமுறையினால் அதிர்ஷ்டவசமாக இங்கிலாந்து கோப்பையை வென்றது. 2021 டி20 உலகக் கோப்பை இறுதிக்கும் நியூஸிலாந்து தகுதி பெற்றது.

ஐசிசி தொடர்களில் கடந்த 14 ஆண்டுகளில் 8 நாக் அவுட் சுற்றில் நுழைந்த நியூஸிலாந்து அணி ஒரே ஒரு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் தொடரில் மட்டும்தான் கோப்பையை வென்று சிம்மாசனம் ஏறியது. அதில் இந்தியாவை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் இது பற்றிக் கூறும்போது, “நியூஸிலாந்து அணியில் சில கடினமான வீரர்கள் உள்ளனர். அவர்கள் தேவைப்படும் தினத்தில் முழு முதல் பங்களிப்பு செய்கின்றனர். இதனால்தான் அரையிறுதி, இறுதி என்று அவர்கள் நுழைய முடிந்துள்ளது. கேன் வில்லியம்சன் ஆல் டைம் கிரேட். ரச்சின் ரவீந்திராவுக்கு இன்னும் பெரிய கரியர் உள்ளது.” என்று புகழ்ந்துள்ளார்.

விராட் கோலி அந்த அணியைப் பற்றிக் கூறும்போது, “குறைந்த வீரர்களை வைத்துக் கொண்டு நியூஸிலாந்து அணி ஆடும் விதம் எனக்கு உண்மையில் கடும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு முறை பெரிய ஆட்டங்களில் அவர்களுடன் மோதும் போது எங்களை மடக்க நல்ல திட்டமுடன் வருகின்றனர். உலகில் வேறு எந்த அணியும் நியூஸிலாந்து அளவுக்கு திட்டமிடலை துல்லியமாக நடைமுறைப்படுத்துவதில்லை. அவர்களுக்கு அந்தப் பெருமை உண்டு. கடந்த சில ஆண்டுகளாக நியூஸிலாந்து அளவுக்கு சீராக ஆடும் அணியை நான் கண்டதில்லை.” என்றார் விராட் கோலி.

2011-லிருந்து ஐசிசி தொடர்களில் அதிக நாக் அவுட் சுற்றுகளில் நுழைந்த அணிகள்:

இந்தியா – 12
நியூஸிலாந்து – 8
இங்கிலாந்து – 7
ஆஸ்திரேலியா – 6
தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் – 5

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article