14.6 C
Scarborough

நாட்டு மக்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சி எச்சரிக்கை!

Must read

தேசிய மக்கள் சக்தி மற்றும் பேராயர் கர்தினால் ஆகியோரிடம் ஏமாற வேண்டாம் என ஐக்கிய தேசியக் கட்சி தரப்பினால் இலங்கை மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவினால் (Palitha Range Bandara) கர்தினால் (Cardinal) மற்றும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பு குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “2019ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு (Gotabaya Rajapaksa) வழங்கிய ஆதரவைப் போன்று கர்தினால் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பாரா?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சுமார் 272 பேர் கொல்லப்பட்டனர். இது கண்டனத்துடன் நினைவு கூறப்பட வேண்டும்.

அந்த ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலின் போது கோட்டாபய ராஜபக்ச பக்கம் தாம் நின்றதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் சில வருடங்களுக்குப் பின்னர் வாக்குமூலம் அளித்திருந்தார்.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதியால் தான் ஏமாற்றப்பட்டதாக சில நாட்களுக்கு முன்னர் கர்தினால் தெரிவித்திருந்தார். இதன்மூலம் கர்தினால் 2019இல் 22 மில்லியன் இலங்கையர்களை முன்னாள் ஜனாதிபதியிடம் ஒப்படைத்தார்.

இதற்குப் பின்னர் தேசத்திற்கு என்ன நடந்தது? இலங்கையின் கடன்களை அடைக்க முடியாமல் விவசாயத் தொழில் வீழ்ச்சியடைந்துள்ளது. மக்கள் அத்தியாவசியப் பொருட்களைப் பெற முடியாமல் திணறினர்.

பொருளாதாரம் சீர்குலைந்து சிலர் உயிரிழக்கவும் மக்கள் சட்டத்தை கையில் எடுத்தனர். இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட ஜே.வி.பி நாடாளுமன்ற வளாகத்தைக் கையகப்படுத்துவதற்கான சதித்திட்டத்தை ஏற்பாடு செய்து அதனை எரியூட்டச் சென்றது.

நேரடி தாக்குதல்வாதிகள்
இதன்போது, பாதுகாப்பு படையினரால் நாடாளுமன்றம் காப்பாற்றப்பட்டதனாலேயே இன்று வரை ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

எனவே, மக்கள் இன்றைய நிலைமையை கவனமாகப் படித்து, தேசத்தை சீர்குலைக்கும் குழுவுடன் கர்தினால் ரஞ்சித் தன்னை இணைத்துக் கொண்டாரா என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.

தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் குழு கடந்த வியாழன் அன்று கர்தினாலைச் சந்தித்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக எடுக்க உத்தேசித்துள்ள ஏழு நடவடிக்கைகள் குறித்து அவரிடம் விளக்கினர்.

இதற்கிடையில், தேசிய மக்கள் சக்தியின் தலைமையிடம் சில கேள்விகளை எழுப்ப வேண்டியுள்ளது. 2019இல் நடந்த தற்கொலைத் தாக்குதலில், ஜே.வி.பியின் தேசியப் பட்டியலில் இடம் பெற்றிருந்த இப்ராஹிமின் இரண்டு மகன்கள் அல்லவா ஈடுபட்டனர்?

2019 ஏப்ரல் 21 அன்று அப்பாவி மக்களைக் கொன்றதில் இப்ராஹிமின் இரண்டு மகன்களும் நேரடியாக தொடர்புற்றிருந்தனர்.

நாட்டு மக்களின் தீர்மானம்
எனவே, தற்கொலைப் படைத் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய ஒரு உறுப்பினரை ஏன் தேசிய மக்கள் சக்தி தேசியப் பட்டியலில் சேர்த்தது?

கடந்த வியாழன் அன்று தன்னைச் சந்தித்த தேசிய மக்கள் சக்தி குழுவிடம் இருந்து இந்த விடயத்தில் கேள்வி எழுப்பினாரா என்பதை கர்தினால் நாட்டுக்கு தெரிவிக்க வேண்டும்.

தேசிய மக்கள் சக்தியை உருவாக்கிய ஜனதா விமுக்தி பெரமுன என்ற ஜே.வி.பி உயிர்த்த ஞாயிறு குண்டுதாரிகளைப் போலவே கொலைகாரர்களின் கூட்டமென்பதை கர்தினால் புரிந்து கொள்ள வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்து கர்தினால் ஒருமுறை நாட்டை காட்டிக்கொடுத்துள்ளார்.

இந்த துரோகத்தின் காரணமாக இந்த நாட்டு மக்கள் இன்றுவரை தவித்து வருகின்றனர். 2019இல் இந்த நாட்டு மக்கள் கர்தினாலால் ஏமாற்றப்பட்ட நிலையில், முன்னாள் ஜனாதிபதியால் கர்தினால் ஏமாற்றப்பட்டார்.

மீண்டும் தேசிய மக்கள் சக்தி மற்றும் கர்தினால் ஏமாற்றப்பட போகிறோமா என்பதை இந்நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும். இந்த விடயத்தில் மக்கள் அக்கறையுடன் செயற்பட வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article