நாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக, யாழ் குடாநாடு முழுவதும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த சூழலில், யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேசம் வெள்ளத்தால் சூழப்பட்டு, வரலாற்று புகழ் பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயப் பகுதி வெள்ளக்காடாக மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது. வடக்கு கிழக்கு பகுதியை சிக்கியுள்ள அடைமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்களும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் வெள்ளப் பெருக்கினால் அச்சமும் கவலையும் நிலவி வருகின்றன.
கடந்த 24 மணிநேரத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் 253 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக அறியமுடிகிறது. இந்த சீரற்ற காலநிலை காரணமாக, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விடுதிகள் புதன்கிழமை (27) முதல் மூடப்பட்டு, மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
பராக்கிரம சமுத்திரத்தின் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் திடீர் வெள்ளம் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் பின்புலத்தில், நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகாரசபை இணைந்து தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் விமுறைகளையும் ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.